Saturday 16 February 2013

தன்னை உணர்வது எப்படி?

வினை கழித்து   தன்னை உணர்வது எப்படி?

  "வெவ்வினைக்  கீடான காயம் இது மாயம்" நாம் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தகுந்தபடி நமக்கு உடல் தந்து இறைவன் நம்மை படைத்து அனுப்பினார் உலகத்தில்! இந்த உடல் வினைக்கு தக்கபடி செயல்படுவதால் அனைத்தும் மாயையே! வினைப்பயனே! இப்படியே போனால் அழிந்து விடும் உடல்! அழித்து விடுவர் உடலை! சுட்டோ! இட்டோ! அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகையே, கண்மணி ஒளியை கண்டு உணர்ந்து தவம் செய்வதாகும்! ஒப்பற்ற மேலான இந்த தவம் சும்மா இருப்பதேயாகும்! "வினை போகமே ஒரு தேகங்கண்டாய்" என ஞானி ஒருவர் கூற்றும் இப்பொருளே! தேகம் அழியாமலிருக்க வேண்டுமானால் வினை இல்லாமலாக வேண்டும்!

அதற்க்கு தான் ஞான சாதனை!- தவம்!- சும்மா இருக்கவேண்டும்! கண்மணி ஒளியை குருவிடம் தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யச்செய்ய ஒளிபெருகி சூட்சுமம் நிலையிலிருக்கும் வினையாகிய திரை உருகி கரைந்து விடும்! வினை தீரத்தீர  ஒளி மிஞ்சும்! மிஞ்சுகின்ற ஒளி உடல் முழுவதும் பரவும்! ஊன  உடலே ஒளி உடல் ஆகும்! பிறவி கிடையாது! வினை இல்லையெனில் பிறவி இல்லை!

வினைகள் மூன்று! பிராரத்துவம், ஆகாமியம், சஞ்சிதம். குரு தீட்சை பெற்று தவம் செய்யும் சாதகன் பிராரத்துவகர்மம்  முதலில் கொஞ்சம் கொஞ்சமாக தீரும்! குரு தீட்சை பெற்ற சாதகன் உத்தமனாக வாழ்வதால் ஆகான்மிய கர்மம் தோன்றாது! தோன்றினால் குரு தடுத்து காத்தருள்வார்! "ஆகான்மியம் அவன் ஆசானையே சேரும் "! தொடர்ந்து தவம் செய்பவன் கண் ஒளி பெருகப் பெருக ஞானக்கனல் பெருகக் பெருக சஞ்சித கர்மமும் கொஞ்சங் கொஞ்சமாக வந்துதீரும்! நைந்து பியந்து போனாலும் நாதன் கை விடமாட்டான்! நான் மறைதீர்ப்பு! கர்மம் தொலையவே காரியம் செய்யணும்! சிவகாரியம்! - மோனம் கூடி சும்மா இருக்கும் நிலையே சிவகாரியம்! அந்த ஒளியை சரணடைந்தால் பேரின்பமே எந்நாளும்! நாமும் வாழலாம்! எல்லோரையும் வாழ வைக்கலாம்! குருவாக உயர்ந்து குவலயம் காக்கலாம்!

மரணம் எப்படி இருக்கும்?! மயக்கம்-தூக்கம்-மரணம் என மூன்று நிலை உள்ளது. மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர்
நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம். மிகக்குறுகிய காலம் உணர்வு இல்லாமல் போவது.  தூக்கம் - நம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலை கொள்ளும் நேரம், ஒடுங்கும் நேரம். நாடு உடலில் ஒடுங்கும். மிக குறைந்த அளவில் உணர்வு இருக்கும். மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு வெளியேறுதல்.மரணம் நம் கையில்!? தடுக்கலாம்!? மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும்.உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்து கொள்ளவேண்டும். உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ?! அங்கேயே அதை பத்திரப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்!

அங்கே இருக்கச்செய்து விட்டால் அது தான் ஞான சாதனை! தவம்!!பிறந்தது இறப்பதற்கல்ல! இறப்பை வெல்வதற்கு! அதுவே ஞானம். இதை உரைத்ததுவே சனாதானதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல் தடுக்க பாடுபட வேண்டும். "தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார். இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு  சாப்பாடு என அலைகிறான். சாப்பிடதான் வாழ்கிறான் அதற்குதான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான். ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான்! பிறப்பதே சாப்பாட்டுக்காகத்தான்! சாப்பாடு அல்ல! சாவுக்கான பாடு சா- பாடு!? சாவதற்காக படாத பாடுபடுகிறான்.  எப்படியோ சாகிறான்!

சாககூடாது என்பதே சித்தர்கள் உபதேசம்!
சாகாதவனே சன்மார்க்கி!

No comments:

Post a Comment