Saturday 16 February 2013
தவம் - சும்மா இரு!
மெய்ஞான சற்குரு வழியாக தெளிவு பெற உபதேசமும் அனுபவம் பெற தீட்சையும் பெற்று இந்த சாகாகல்வியை ஞானதானம் பெற்று தவம் செய்ய வேண்டும்.! சுருதி – யுக்தி - அனுபவம் இம்மூன்றுமே பூரண நிலையை கூட்டுவிக்கும்! ஞான தானம் பெற்று அதாவது தீட்சை பெற்று ஞான நூற்கள் படித்து யுக்தியினால் தெளிந்து தவம் செய்து அனுபவங்கள் பெற வேண்டும். தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றல் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமாமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! உடலை வருத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
தவம் என்றால் நான் யார் ? என அறிய உணர மெய்ஞான சற்குருவிடம் ஞான தானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே! இறைவன் எங்கு உள்ளான், எழு திரைகள் எங்கு உள்ளது, சத்தியஞான சபை என்பதை சாகாக்கல்வி புத்தகத்தில் பக்கம் 54 படிக்கவும் குரு தீட்சை பெற்று கண்ணில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும் அருவியென ! கண் திறந்து தான் தவம் செய்யவேண்டும். இங்ஙனம் தவம் தொடர்ந்தால் பல வித அனுபவங்கள் நாம் பெறலாம்! நமது வள்ளல் பெருமான் ஞான சரியை யில் கூறியபடி நாம் இங்ஙனம் தவம் செய்து வந்தால் பெறலாம் நல்ல வரமே! மரணமில பெருவாழ்வே! பிறவா பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாக இணையலாம்! பேரின்பம் பெறலாம்! “என் இரு கண்காள் உமது பெருந்தவம் எப்புவனத்தில் யார் தான் செய்வார்?” - திருஅருட்பா 2770 வள்ளலார் தன் இருகண் களாலாலும் செய்த பெருந்தவத்தை தானே வியந்து போற்றுகிறார்! என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம் என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்.வள்ளல் பெருமான் கண்மணி பற்றி பாடிய பாடல்கள் பல உள்ளன.
இதுவே தவம்! இதனால் கிட்டுவதே ஞானம். ஞானம் தன்னை உணர்தலே. தவம் செய்ய நாம் காட்டுக்கு போகவேண்டியது இல்லை! குடும்பத்தை விட்டு ஓடவேண்டியது இல்லை. காவி உடுத்தி தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியது இல்லை. நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புறுத்தாது இருக்கவேண்டும். உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்.கடுமையான ஜப தபங்கள் வேண்டாம். சுருக்கமாக சொன்னால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற தடை அல்ல! இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். தவத்தை (குருவிடம் தீக்ஷை பெற்றபின்) விடாது தொடர்ந்து 30 நிமிடமோ ஒரு மணி நேரமோ செய்தால் போதுமானது. நீதி நேர்மை ஒழுக்கமே உங்கள் தவத்தை சிறப்பிக்கும் ! வேஷம் போடாதீர்கள்! எந்த தீய பழக்கங்களும் இல்லாது பார்த்து கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்குள் இருகிறானல்லவா? வெளியே கோவிலில், குலங்களில் மலைகளில் தேடாதீர். தவம் செய்வோர் சுத்த சைவ உணவையே உண்ணவேண்டும். ஆத்மா சாதகன் பட்டினி கிடக்கக்கூடாது, சிரிதளதாவது உண்ணவேண்டும். தவம் சித்திக்க வேண்டும் இறைவனோடு ஐக்கியம் ஆக வேண்டும் என்று நான் யார் என்பதை உணர வேண்டும் என்ற ஆன்ம பசியோடு நாம் இருக்க வேண்டும். புராணங்கள் கதைகளில் ரிஷிகள் செய்யும் பலவித தவங்களை கேள்வி பட்டு இருக்கிறோம்.இதை எல்லாம் பார்த்து பல மக்களுக்கு அவநம்பிக்கை பிறந்தது! அடடா இந்த மாதிரியெல்லாம் தவம் செய்ய முடியாது , இன்னொரு ஜென்மம் எடுத்து தான் வர வேண்டும் என அலுத்து கொள்வார்கள். இன்றும் இவ்வாறே பலர் உள்ளனர்.
உலக மக்களே அவநம்பிக்கை வேண்டாம்! உலகை உய்விக்க மெய்ஞானிகள் பலர் தோன்றி உள்ளனர். ஞான நூற்கள் பல தந்துள்ளார்கள். கவலை வேண்டாம். காலம் செய்த கோலம் ஞானம் பலகாலமாக மறைக்கப்பட்டு விட்டது? காரியவாதிகள் சூழ்ச்சி! ஞான சூரியன் திருவருட் பிரகாசவள்ளலார் பிறந்தார்! மடைமை என்னும் காரிருள் , அஞ்ஞானம் மக்களை விட்டு விலக கடைவிரித்தார்.!! கடைக்கண் காட்டினார் வள்ளலார்! ஞானம் துலங்க ஆரம்பித்தது. துளிர் விட ஆரம்பித்தது. வந்தார்! சொன்னார்! செய்தார்! வென்றார்! பெற்றார் ஒளி உடலை!!!!! தான் பெற்ற மரணமிலா பெருவாழ்வை சாகாகல்வியை எல்லாருக்கும் பறை சாற்றினார்!!பயிற்றுவித்தார்! இன்றும் அடியேன் மூலம் பயிற்றுவித்து இருக்கிறார். ஞான பாதை தான் மிக எளிதானது. ஞானதானம் செய்து அதனால் கிட்டும் புண்ணியம் பலன் மேலோங்கி தவம் சித்தித்து ஞானம் பெற்று பேரின்பம் பெருக! தானமும் தவமுமே ஞானம் பெற ஒரே வழி! ஞான தானமே ஞான சாதனையே நம்மை நம்மை இறைவனிடம் சேர்க்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment