Saturday 16 February 2013

1008 இதழ் தாமரை எப்படி மலரும்?



 காலை எழுவது முதல் இரவு படுக்க போவது வரை ஒரு மனிதன்  எப்படி, எப்படி இருக்கவேண்டும் என்பதை நித்திய கரும விதி என்று உபதேசம் செய்து உள்ளார். உடல் மலங்களை நீக்குபவன் ஆரோக்கியமாக வாழலாம்!? மன மலங்களை போக்குபவனே, மரணமிலாது வாழலாம்!?  உடல் மலத்தில், ஏழாவது ஆதாரமாக சகஸ்ரதளமாக நம் உச்சந்தலையில் உள்ள கோழை சொல்லபடுகிறது.  இதை நீக்குவது தவம் செய்பவர்களுக்கு  மட்டுமே  சாத்தியம்! இந்த கோழை முழுவதும் நீங்கினாலே, நம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும்.தலையிலுள்ள கோழை நீங்க ஒரே வழி தவம் செய்வதுதான்! குரு உபதேசம் பெற்று நம் மெய்பொருளாகிய - திருவடியை நம் கண்களில் உள்ள ஒளியை குரு தீட்சை மூலம் உணர்ந்து , அந்த ஒளியை நினைந்து உணர்ந்து தவம் இயற்ற நெகிழ்ச்சி உண்டாகும், கண்ணில் கனல் பெருகும். அந்த ஞானக்கனல் உள்நாடி மூலமாக அக்னி கலையை அடைந்து அங்கிருந்து மேலே சகஸ்ரதளம் நோக்கி செல்லும் ஞானக்கனல் பெருக பெருக அந்த உஷ்ணத்தால் பல காலங்களாக உறைந்து போன கோழை மெல்ல மெல்ல உருகி   மூக்கு வழியாகவும் தொண்டை வழியாகவும் வெளியேறும் . எவ்வளவு கோழை உள்ளதோ அவ்வளவு காலம் நாம் கடுமையாக தவமியற்ற வேண்டும். "தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை" நாம் செய்யும் தவம், நம் ஞானத்தீயை நம் கண்வழி பெருக்கி அதனால் அது சகஸ்ரதளத்தை அடைந்து உணர்வு உண்டாகி  அனலால் இளகி கோழை கரைத்து ஒழுகும். இது சாதனை அனுபவம். தலைப் பகுதியிலுள்ள கோழை முழுவதமாக வெளியேறும் பட்சத்தில் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒளி அலைகளால் அதிர்வு ஏற்பட்டு கொஞ்சங் கொஞ்சமாக இயங்க  ஆரம்பிக்கும். கோழையால் கவிழ்ந்து இருந்த மூளை பகுதி கனம் குறைந்ததும் மலர ஆரம்பிக்கும்.  அதுவரை கவிழ்ந்து இருந்த தாமரை இதழ்கள் மலர ஆரம்பிக்கும். 1008  பகுதியாக சிறு சிறு  பகுதியாக மூளை இருப்பதால் தான் 1008  இதழ் தாமரை என்றனர். ஒளி - சுத்த ஒளி, பொன்னொளி எழும்பி பிரகாசிப்பதால் இதை வள்ளலார் 1008  மாற்று  பொற்கோவில் என்றார். ஒவ்வொரு மனிதனும் தன் தலையிலுள்ள 1008  மாற்று பொற்கோவிலில், நடுநாயகமாக ஒளிவிட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்சோதியை தரிசிக்க வேண்டும். அவனே மரணமிலா பெருவாழ்வு பெறுவான்.  எத்தனையோ பிறவிகள் பிறந்து விட்டோம். இனிமேல் இந்த விளையாட்டு , வினை  ஆட்டுவிக்கும் பிறவி வேண்டாம்! பிறந்த இப்பிறப்பிலே தானே இனி  பிறவாமல் இருக்க இறவாமல் இருக்க வழி தேடுவோம்.  விழியிலே இருக்கும் ஒளியை உணர்ந்து மேன்மை அடைவோம். வாரீர் ஜெகத்தீரே!

No comments:

Post a Comment